கூடங்குளம் போராட்ட வழக்குகளை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் -  தமிழக அரசுக்கு வேல்முருகன் வலியுறுத்தல்
சென்னை, 11 ஜூன் (ஹி.ச.) கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற மக்கள் மீது எஞ்சியுள்ள அனைத்து வழக்குகளையும் மனிதநேய அடிப்படையில் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன
Velmurugan


Hh


சென்னை, 11 ஜூன் (ஹி.ச.)

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற மக்கள் மீது எஞ்சியுள்ள அனைத்து வழக்குகளையும் மனிதநேய அடிப்படையில் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கூடங்குளம் பகுதியில் வாழும் மீனவர்கள், தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் தங்களது மண்ணின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால தலைமுறையினரின் நலனுக்காக முன்னெடுத்த மக்கள் போராட்டத்தின் விளைவுகள் இன்னும் நீடித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

போராட்டம் முடிவடைந்தாலும், அதில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான குடும்பங்கள் மீது தொடரப்படும் வழக்குகள் காரணமாக அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வேலைவாய்ப்புகள் மற்றும் வெளிநாட்டு வேலைக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் பல குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியையும் மனவேதனையையும் எதிர்கொண்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

மக்கள் தங்களது வாழ்வுரிமைக்காக குரல் கொடுத்தது குற்றமல்ல என்றும், போராட்டத்தில் பங்கேற்றவர்களை சமூக விரோதிகளாகக் கருத முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இருப்பினும், அவர்கள் மீது தொடரப்படும் வழக்குகள் நீதியின் மீதான நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலின்போது வழங்கப்பட்ட உறுதிமொழிகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில், தற்போது எஞ்சியுள்ள 46-க்கும் மேற்பட்ட வழக்குகள் பல குடும்பங்களின் நிம்மதியை பறித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, கூடங்குளம் போராட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மற்றும் சுப. உதயகுமாரன் உள்ளிட்டோர் மீது நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற்று, அவர்களின் நீண்டகால துயரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ