சட்டவிரோதமான பட்டாசு உற்பத்தியில் ஏற்பட்ட தீ விபத்தில் வட மாநில பெண் தொழிலாளி உயிரிழந்த வழக்கு - இட உரிமையாளர் உட்பட இருவர் கைது
ராஜபாளையம், 11 ஜூன் (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரம் கிராமத்தில் மாட்டுக் கொட்டகையை மறைவிடமாகப் பயன்படுத்தி சட்டவிரோதமாகப் பட்டாசு கருந்திரி தயாரிக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், எதிர்பாராதவிதமாக நேற்று (ஜூன் 10) ஏற்
சட்டவிரோதமாகப் பட்டாசு உற்பத்தியில் ஏற்பட்ட தீ விபத்தில் வட மாநில  பெண் தொழிலாளி உயிரிழந்த வழக்கு  - இட உரிமையாளர் உட்பட இருவர் கைது


ராஜபாளையம், 11 ஜூன் (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரம் கிராமத்தில் மாட்டுக் கொட்டகையை மறைவிடமாகப் பயன்படுத்தி சட்டவிரோதமாகப் பட்டாசு கருந்திரி தயாரிக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், எதிர்பாராதவிதமாக நேற்று (ஜூன் 10) ஏற்பட்ட தீ விபத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளி ஒருவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் நான்கு தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், உரிய அரசு அனுமதி மற்றும் பாதுகாப்பு வசதிகள் இன்றி, குடியிருப்புப் பகுதிக்கு அருகிலுள்ள மாட்டுக் கொட்டகையில் வெடிமருந்து கலவை செய்து கருந்திரி தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.

உராய்வு காரணமாக வெடிமருந்தில் தீப்பற்றியதில், அடுத்தடுத்து பரவிய தீயில் சிக்கி சாவித்திரி கோஸ், வயது 50, என்ற வட மாநில தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சட்டவிரோத உற்பத்திக்கு இடம் கொடுத்த நில உரிமையாளர் மற்றும் கருந்திரி தயாரிப்புக்காக இடத்தை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த குத்தகைதாரர் ஆகிய இருவர் மீதும் வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து, இந்த சட்டவிரோத செயலில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழில் பரவலாக நடைபெறும் நிலையில், அரசு விதிமுறைகளை மீறி குடியிருப்பு மற்றும் விவசாயக் கொட்டகைகளில் ஆபத்தான முறையில் வெடிமருந்து கையாளப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

Hindusthan Samachar / vidya.b