குறுவை தொகுப்பு திட்டம் விவசாயிகளை ஏமாற்றும் வெற்று அறிவிப்பு – திமுக விவசாய அணி கடும் தாக்கு
சென்னை, 12 ஜூன் (ஹி.ச) தமிழக அரசின் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் மற்றும் மும்முனை மின்சார அறிவிப்பு ஆகியவை வெறும் விளம்பர அறிவிப்புகளாகவே உள்ளன என்றும், விவசாயிகளின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு காண தற்போதைய அரசு தவறிவிட்டதாகவும் திமுக விவச
Aks


சென்னை, 12 ஜூன் (ஹி.ச)

தமிழக அரசின் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் மற்றும் மும்முனை மின்சார அறிவிப்பு ஆகியவை வெறும் விளம்பர அறிவிப்புகளாகவே உள்ளன என்றும், விவசாயிகளின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு காண தற்போதைய அரசு தவறிவிட்டதாகவும் திமுக விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திமுக ஆட்சிக்காலத்தில் ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு டெல்டா விவசாயிகளின் குறுவை சாகுபடிக்கு தேவையான நீர் வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தற்போதைய அரசு நீர்மேலாண்மையில் அனுபவமின்மையால் அந்த நடைமுறையையே தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், விவசாயிகளுக்கு தேவையான காவிரி நீரைப் பெற்றுத் தருவதிலும், கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதிலும் மாநில அரசு தோல்வியடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். டெல்லியில் இந்த விவகாரத்தை வலியுறுத்தத் தவறிய அரசு, தற்போது குறுவை தொகுப்பு திட்டம் என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்ற முயற்சிப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

திமுக ஆட்சிக்காலத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டதோடு, கூட்டுறவு வங்கிகளில் பெற்றிருந்த விவசாயிகளின் நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், திமுக எதிர்க்கட்சியாக இருந்த காலத்திலும் விவசாயிகளின் பிரச்சினைகளை முன்னிறுத்தி போராட்டங்கள், பேரணிகள், கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டதாகவும், விவசாய தற்கொலைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியவர் மு.க.ஸ்டாலின் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்சார விநியோகத்தில் மாநிலம் முழுவதும் கடும் சிக்கல்கள் நிலவி வரும் நிலையில், ஒரு முனை மின்சாரத்தையே முறையாக வழங்க முடியாத அரசு, மும்முனை மின்சாரம் வழங்குவதாக அறிவிப்பது நடைமுறைக்கு சாத்தியமற்றதாக இருப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.

திமுக ஆட்சியில் மாநிலத்தின் மின் உற்பத்தித் திறன் உயர்த்தப்பட்டதோடு, சுமார் 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டதாகவும், நெல் உற்பத்தி மற்றும் நேரடி நெல் கொள்முதல் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், உழவர் சந்தைகள், கூட்டுறவு கடன் தள்ளுபடி, பயிர்க் கடன் வட்டி குறைப்பு, பயிர் காப்பீட்டு மானியங்கள், விவசாய தொழிலாளர் நல வாரியம், காவிரி–குண்டாறு மற்றும் தாமிரபரணி–கருமேனியாறு–நம்பியாறு இணைப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியதாக அவர் பட்டியலிட்டுள்ளார்.

விவசாயிகளின் உண்மையான பிரச்சினைகளை புரிந்துகொண்டு செயல்பட வேண்டிய அரசு, வெறும் அறிவிப்புகள் மற்றும் விளம்பர நடவடிக்கைகளில் மட்டும் கவனம் செலுத்துவதாக குற்றம்சாட்டியுள்ள ஏ.கே.எஸ். விஜயன், காவிரி நீர் பெறுதல், மேகதாது அணைத் திட்டத்தை எதிர்த்தல், அனைத்து கட்சி மற்றும் விவசாய சங்கங்களுடன் ஆலோசனை நடத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ