Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 ஜூன் (ஹி.ச.)
காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த சில ஆண்டுகளாக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு நீர் திறக்கப்படாததால் டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து, உழவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம் என்றும், இதன் காரணமாக கடந்த ஆண்டுகளில் குறுவை சாகுபடி பரப்பு கணிசமாக அதிகரித்து 2025-ஆம் ஆண்டில் 6.31 லட்சம் ஏக்கரை எட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த ஆண்டு மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவான 93.47 டி.எம்.சியில் தற்போது 41.64 டி.எம்.சி மட்டுமே நீர் இருப்பதால் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை என்றும், கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹாரங்கி மற்றும் ஹேமாவதி அணைகளிலும் குறைந்த அளவு மட்டுமே நீர் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவில் பெய்யாததால் கர்நாடக அணைகள் விரைவில் நிரம்பும் வாய்ப்பு இல்லை என்றும், ஆகஸ்ட் மாதத்தின் பிற்பகுதிக்கு முன்னர் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்படுவது சாத்தியமற்றதாகத் தெரிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
இதனால் குறுவை சாகுபடியை கைவிடும் நிலைக்கு உழவர்கள் தள்ளப்பட்டுள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
நிலத்தடி நீரை நம்பி சில பகுதிகளில் உழவர்கள் சாகுபடி பணிகளைத் தொடங்கியிருந்தாலும், கடந்த சில வாரங்களாக தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்படாததால் நெற்பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன் காரணமாக குறுவை சாகுபடி பரப்பு கடுமையாக குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.
குறுவை சாகுபடி பாதிக்கப்படுவதால் ரூ.2,000 கோடி அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்படக்கூடும் என்றும், லட்சக்கணக்கான வேளாண் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் சூழல் உருவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நெருக்கடியை சமாளிக்க தமிழக அரசு உடனடியாக காவிரி பாசன மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து, மத்திய அரசிடம் நிதி பெற்று உழவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், அரசு அதிகாரிகள், வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஆலோசனைக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், ரூ.5,000 இடுபொருள் மானியத்துடன் குறுவைத் தொகுப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்றும், குறைந்தது 3 முதல் 4 லட்சம் ஏக்கர் வரை குறுவை நெல் சாகுபடி நடைபெறுவதை உறுதி செய்ய தடையற்ற மும்முனை மின்சாரம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்றும் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ