சிறார்களின் பாதுகாப்புக்காக போலீசார் தயாரித்த விழிப்புணர்வு வீடியோவுக்கு பாராட்டு
விஜயவாடா , 12 ஜூன் (ஹி.ச.) சிறார்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யும் நோக்கில் என்டிஆர் மாவட்ட போலீசார் மேற்கொண்டு வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று வருகின்றன. குறிப்பாக, “குட் டச் - பேட் டச்” குறித்
A


விஜயவாடா , 12 ஜூன் (ஹி.ச.)

சிறார்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யும் நோக்கில் என்டிஆர் மாவட்ட போலீசார் மேற்கொண்டு வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று வருகின்றன.

குறிப்பாக, “குட் டச் - பேட் டச்” குறித்த விழிப்புணர்வு வீடியோ சமூக வலைதளங்களில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

போலீஸ் கமிஷனர் எஸ்.வி. ராஜசேகர பாபு தலைமையில் செயல்பட்டு வரும் ‘காக்கி ஸ்டூடியோ’ குழுவினர் இந்த வீடியோவை உருவாக்கியுள்ளனர்.

குழந்தைகளுக்கு எளிதில் புரியும் வகையில் கார்ட்டூன் வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வீடியோ, நல்ல தொடுதல் மற்றும் தவறான தொடுதல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

இந்த முயற்சியை ஆந்திரப் பிரதேச மகளிர் ஆணையத் தலைவர் டாக்டர் ஷைலஜா ராயபாட்டி பாராட்டியுள்ளார்.

இது குறித்து,அவர் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த போலீசாரின் அக்கறையை இந்த வீடியோ வெளிப்படுத்துவதாகவும், இதுபோன்ற முயற்சிகள் சமுதாயத்திற்கு முன்னுதாரணமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சைபர் குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் கடந்த மாதம் ‘காக்கி ஸ்டூடியோ’ என்ற சிறப்பு பிரிவை என்டிஆர் மாவட்ட போலீசார் தொடங்கினர்.

இந்த பிரிவினர் நவீன தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) உதவியுடன் விழிப்புணர்வு வீடியோக்கள் மற்றும் தகவல் போஸ்டர்களை உருவாக்கி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தயாரிக்கப்பட்டுள்ள “குட் டச் - பேட் டச்” வீடியோ, சிறார்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் முக்கிய முயற்சியாக அமைந்துள்ளது. இந்த புதுமையான நடவடிக்கைக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA