Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 ஜூன் (ஹி.ச.)
சென்னை மெரினா கடற்கரையில் திமுகவுக்கு ஆதரவாக அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக, சின்னத்திரை நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான மரியா ஜூலி உள்ளிட்ட 4 பேர் மீது மெரினா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த ஜூலி, நேற்று தனது ஆதரவாளர்கள் மூவருடன் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள ஔவையார் சிலை பின்புறம் வந்தார். அங்கு Vote for DMK உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மேலும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், சமூக வலைதளங்களில் தமக்கு எதிராக அவதூறு மற்றும் மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும் குறிப்பிடும் பதாகைகளையும் அவர்கள் காட்சிப்படுத்தினர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மெரினா போலீசார், ஜூலி உள்ளிட்ட 4 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, தவெக கட்சியைச் சேர்ந்த ஒருவர் சமூக வலைதளங்களில் தம்மை தகாத வார்த்தைகளால் விமர்சித்து, கொலை மிரட்டல் விடுத்து வருவதாக ஜூலி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஏற்கனவே சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் நல்லாட்சி அமைய வேண்டும் என்ற நோக்கில் தனிப்பட்ட முறையில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருவதாகவும் ஜூலி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, தேர்தல் தொடர்பான பிரச்சாரங்களுக்கு அதிகாரிகளிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி, எழுத்துப்பூர்வ உறுதிமொழி பெற்ற பின்னர் அவர்களை அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், உரிய அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கூறி தேர்தல் அதிகாரி சரவணன் அளித்த புகாரின் அடிப்படையில், ஜூலி உள்ளிட்ட 4 பேர் மீது அனுமதியின்றி பிரச்சாரம் செய்தல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மெரினா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ