ஆலந்தூரில் மகளிர் உடற்பயிற்சி மைய பொறுப்பாளருக்கு தொடர் தொல்லை - தவெக பகுதி செயலாளர் மீது வழக்கு
சென்னை, 12 ஜூன் (ஹி.ச.) சென்னை ஆலந்தூர் பகுதியில் மகளிர் உடற்பயிற்சி மைய பொறுப்பாளருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக கூறப்படும் தமிழ்நாடு வெற்றிக் கழக (தவெக) நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அவரை கட்சியின் அனைத்து பொறுப்புக
தவெக அலுவலகம்


சென்னை, 12 ஜூன் (ஹி.ச.)

சென்னை ஆலந்தூர் பகுதியில் மகளிர் உடற்பயிற்சி மைய பொறுப்பாளருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக கூறப்படும் தமிழ்நாடு வெற்றிக் கழக (தவெக) நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆலந்தூர் மாதவபுரம் பகுதியைச் சேர்ந்த கீதா, 160-வது வார்டில் செயல்பட்டு வரும் மகளிர் உடற்பயிற்சி மையத்தின் பொறுப்பாளராக உள்ளார். தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, தன்னை பணியில் இருந்து நீக்காமல் இருக்க வேண்டும் என்ற பெயரில் ஆலந்தூர் வடக்கு பகுதி தவெக செயலாளர் வேம்புலி தொடர்ந்து தொல்லை கொடுத்ததாகவும், இரவு நேரங்களில் வீட்டிற்கு வந்து அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதாகவும் அவர் பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் பரங்கிமலை போலீசார் வேம்புலி மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி வேம்புலியை ஆலந்தூர் வடக்கு பகுதி செயலாளர் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து கட்சி பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக சென்னை புறநகர் மாவட்ட தவெக செயலாளரும் எம்.எல்.ஏவுமான சரவணன் அறிவித்துள்ளார்.

இந்த சம்பவம் ஆலந்தூர் பகுதியில் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam