Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 ஜூன் (ஹி.ச)
2026-ஆம் ஆண்டிற்கான 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் இதுவரை அச்சிடப்படவில்லை என அரசு தேர்வுகள் இயக்குநர் சசிகலா தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் விவரங்களில் சில திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளதே இந்த தாமதத்திற்கு முதன்மையான காரணம் என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், விரைவில் நடைபெறவுள்ள துணைத் தேர்வுகளும் மதிப்பெண் சான்றிதழ் அச்சிடும் பணிகள் தாமதமாவதற்கு மற்றொரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
துணைத் தேர்வு முடிவுகள் வெளியான பின்னரே, அனைத்து மாணவர்களுக்கும் ஒருசேர சான்றிதழ்கள் தயாரிக்கப்படும் என தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, பெற்றோர் பெயர் உள்ளிட்ட அடிப்படை விவரங்களில் காணப்படும் பிழைகளை சரிசெய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த திருத்தப் பணிகள் முழுமையாக நிறைவடைந்தவுடன், எந்தவித காலதாமதமும் இன்றி மாணவர்களுக்கு அவர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என இயக்குநர் சசிகலா உறுதியளித்துள்ளார்.
சான்றிதழ் கிடைக்காததால் உயர்கல்வி சேர்க்கையில் பாதிப்பு ஏற்படுமோ என மாணவர்களும் பெற்றோர்களும் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும், இணையவழி மதிப்பெண் பட்டியலை தற்காலிகமாக பயன்படுத்தி கல்லூரிகளில் விண்ணப்பிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b