மேட்டூர் அணை நீர் திறக்காததால் விவசாயிகள் அதிர்ச்சி - அரசை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி
சேலம், 12 ஜூன் (ஹி.ச.) ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணை நீர், இந்த ஆண்டு இன்று வரை திறக்கப்படாதது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித
இபிஎஸ்


சேலம், 12 ஜூன் (ஹி.ச.)

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணை நீர், இந்த ஆண்டு இன்று வரை திறக்கப்படாதது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில்,

குறுவை சாகுபடி மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் காவிரி நீரை பெரிதும் நம்பி இருப்பதால், நீர் வெளியீடு மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விவசாயிகளின் பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதாக கூறிய அரசு அதை நிறைவேற்றவில்லை என்றும், தற்போது மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்காமல் ரூ.134 கோடி மதிப்பிலான சிறப்பு தொகுப்பு அறிவிப்பை வெளியிட்டு விவசாயிகளை ஏமாற்றுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

அதேபோல், மும்முனை மின்சாரம் 24 மணி நேரம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 18 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், அறிவிக்கப்படாத மின்வெட்டுகளால் பம்பு செட்டுகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய இந்த பிரச்சினையின் தீவிரத்தை அரசு உணர்ந்து, மேட்டூர் அணையில் இருந்து உடனடியாக நீர் திறந்து, கடைமடை பகுதிகள் வரை சென்றடைய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P