ஆன்லைன் பட்டா மாறுதல் சேவையில் விரைவு நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் உயர்மட்ட ஆய்வுக்கூட்டம்
சென்னை, 12 ஜூன் (ஹி.ச.) தமிழகத்தில் இணையவழி பட்டா மாறுதல் சேவையை மேலும் விரைவுபடுத்தி பொதுமக்களுக்கு எளிதாகக் கொண்டுசெல்லும் நோக்கில், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் சென்னையில் இன்று முக்கிய ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
ஆன்லைன் பட்டா மாறுதல் சேவையில் விரைவு நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் உயர்மட்ட ஆய்வுக்கூட்டம்


சென்னை, 12 ஜூன் (ஹி.ச.)

தமிழகத்தில் இணையவழி பட்டா மாறுதல் சேவையை மேலும் விரைவுபடுத்தி பொதுமக்களுக்கு எளிதாகக் கொண்டுசெல்லும் நோக்கில், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் சென்னையில் இன்று முக்கிய ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், உட்பிரிவு இல்லாத நிலங்களுக்கான பட்டா மாறுதல் மற்றும் தானியங்கி முறையில் பட்டா மாறுதல் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

தற்போது நடைமுறையில் உள்ள இணையவழி பட்டா மாறுதல் சேவையில் ஏற்படும் தாமதங்களைக் களைந்து, விண்ணப்பங்களை 15 நாட்களுக்குள் முடித்து வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

குறிப்பாக, கிராம நிர்வாக அலுவலர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் சார்-பதிவாளர் அலுவலகங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதன் மூலம் கோப்புகள் தேங்குவதைத் தவிர்க்க முடியும் என அவர் வலியுறுத்தினார்.

தானியங்கி பட்டா மாறுதல் முறையை விரிவுபடுத்துவதன் மூலம் பொதுமக்கள் அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய அவசியம் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் குமார் மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ் செல்வன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வருவாய்த்துறை, பதிவுத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்று, பட்டா மாறுதலில் உள்ள தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து விளக்கினர்.

அடுத்த கட்டமாக, மாவட்ட ஆட்சியர்கள் மூலம் இந்தத் திட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தவும், கிராம அளவில் சிறப்பு முகாம்கள் அமைத்து பட்டா மாறுதல் விண்ணப்பங்களை துரிதமாகத் தீர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b