குறுவை சாகுபடிக்கு ரூ.134.83 கோடி சிறப்புத் தொகுப்பு - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
சென்னை, 12 ஜூன் (ஹி.ச.) தமிழகத்தில் குறுவை நெல் சாகுபடியை ஊக்குவித்து, நெல் உற்பத்தி மற்றும் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில், 2026-ஆம் ஆண்டிற்கான ரூ.134.83 கோடி மதிப்பிலான குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் அ
முதலமைச்சர்


சென்னை, 12 ஜூன் (ஹி.ச.)

தமிழகத்தில் குறுவை நெல் சாகுபடியை ஊக்குவித்து, நெல் உற்பத்தி மற்றும் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில், 2026-ஆம் ஆண்டிற்கான ரூ.134.83 கோடி மதிப்பிலான குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

தென்மேற்குப் பருவமழை தாமதம் மற்றும் மேட்டூர் அணையின் குறைந்த நீர்மட்டம் காரணமாக, வழக்கம்போல் ஜூன் 12-ஆம் தேதி அணையைத் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இதையடுத்து, டெல்டா மாவட்டங்களில் வடிமுனைக் குழாய்க் கிணறுகள் மூலம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்காக ரூ.77.50 கோடியும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் கார், குறுவை மற்றும் சொர்ணவாரி நெல் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.57.33 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் இயந்திர நடவு மற்றும் நேரடி விதைப்புக்கான ஊக்கத்தொகை, உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரக்கலவை, விதை நெல் மானியம் மற்றும் புதிய நெல் ரகங்களின் சான்று விதை உற்பத்திக்கான உதவித்தொகைகள் வழங்கப்படவுள்ளன.

மேலும், குறுவை சாகுபடிக்காக தேவையான நெல் விதைகள் மற்றும் உரங்கள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதுடன், விவசாயிகளுக்கு தினமும் 18 மணி நேரம் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் மூலம் நெல் சாகுபடி பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் அதிகரித்து, விவசாயிகளின் வாழ்வாதாரமும் மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பும் வலுப்பெறும் என அரசு தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P