கேரளாவில் நிபா வைரஸ் அச்சுறுத்தல் - தமிழகத்தில் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு
சென்னை, 12 ஜூன் (ஹி.ச.) கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாநில சுகாதாரத்துறை அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் அவசர உத்தரவு பிறப்பித்த
Health Department in Tamil Nadu maintains strict surveillance.


சென்னை, 12 ஜூன் (ஹி.ச.)

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாநில சுகாதாரத்துறை அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.

எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை பலப்படுத்தவும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக கேரள மாநிலத்திற்கு சமீபத்தில் பயணம் மேற்கொண்டு திரும்பியவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவர்களின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து, நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிபா வைரஸ் என்பது வவ்வால்கள் மற்றும் பன்றிகள் போன்ற விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய ஒரு கொடிய தொற்றுநோய் என சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது.

பாதிக்கப்பட்ட விலங்குகளின் எச்சில், சிறுநீர் மூலம் அசுத்தமான பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை உட்கொள்வதன் மூலமும், பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதன் மூலமும் இந்த வைரஸ் பரவும் அபாயம் உள்ளது.

இந்த வைரஸ் தாக்கினால் கடுமையான காய்ச்சல், தலைவலி, வாந்தி, மூச்சுத் திணறல் மற்றும் தசை வலி ஆகியவை ஆரம்ப அறிகுறிகளாக வெளிப்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

நோயின் தீவிரம் அதிகரிக்கும்போது மூளை வீக்கம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையை உருவாக்கும் என்பதால் பொதுமக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

நிபா வைரஸ் அறிகுறிகளுடன் யாரேனும் மருத்துவமனைக்கு வந்தால், அவர்களை உடனடியாக தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், நோயாளிகளை கவனிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கட்டாயம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களான PPE கிட் அணிந்து பணியாற்ற வேண்டும் எனவும் கண்டிப்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பழங்களை நன்கு கழுவிய பின்னரே உட்கொள்ள வேண்டும் என்றும், வவ்வால்கள் கடித்த பழங்களை தவிர்க்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் சுய மருத்துவம் செய்யாமல் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையை அணுகுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b