Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 12 ஜூன் (ஹி.ச)
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற மாபெரும் மக்கள் போராட்டம் தொடர்பான வழக்கின் விசாரணை ஜூன் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2018 மே 22-ஆம் தேதி, ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஊர்வலமாக சென்றனர்.
அப்போது ஏற்பட்ட பதற்றமான சூழலில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை சிபிஐ விசாரணை மேற்கொண்டு, போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி 101 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கு மதுரையில் உள்ள தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட 101 பேரில் 97 பேர் நேரில் ஆஜராகினர். மீதமுள்ள நபர்கள் ஆஜராகாத நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி, அடுத்த விசாரணையை வரும் ஜூன் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
ஆறு ஆண்டுகளைக் கடந்தும் இந்த வழக்கு இன்னும் இறுதிக்கட்டத்தை எட்டாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b