Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 12 ஜூன் (ஹி.ச.)
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகிலுள்ள கடற்பகுதியில் மேலும் நான்கு புதிய ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஹிந்துஸ்தான் ஆயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் கவலை அளிப்பதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதிய கிணறுகள் அமைப்பதற்காக கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) அனுமதி கோரி தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
ஏற்கனவே அந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் எண்ணெய் கிணறுகளில் உற்பத்தி குறைந்து வருவதால் புதிய கிணறுகள் அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இத்தகைய ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் கடல்சார் சுற்றுச்சூழலுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மீன்வள வளங்கள் பாதிக்கப்படுவதன் மூலம் ஆயிரக்கணக்கான மீனவர் குடும்பங்களின் வாழ்வாதாரம் நேரடியாக பாதிக்கப்படும் சூழல் உருவாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். பரங்கிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கடற்பகுதிகள் சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் என்பதால், அங்கு மேற்கொள்ளப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் கடல் நீர் மாசுபாடு, உயிரியல் சமநிலை பாதிப்பு மற்றும் பாரம்பரிய மீன்பிடித் தொழிலுக்கு நீண்டகால அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டு இதேபோன்ற முயற்சிகளுக்கு எதிராக தமிழக அரசு எடுத்த நிலைப்பாடு மக்களிடையே வரவேற்பைப் பெற்றதாக குறிப்பிட்டுள்ள ஜவாஹிருல்லா, தற்போதைய அரசும் அதே உறுதியான நிலைப்பாட்டை தொடர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பும், மீனவர்களின் வாழ்வாதார உரிமையும் எந்த நிறுவனத்தின் நலனுக்காகவும் பலியாக்கப்படக் கூடாது என்றும், பரங்கிப்பேட்டை கடற்பகுதியில் புதிய ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது என்றும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ