Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 12 ஜூன் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களமருதூரில் மளிகை கடை நடத்தி வருபவர் ஏழுமலை.
இவர் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில், களமருதூர் சப்-இன்ஸ்பெக்டர் சேட்டு தலைமையிலான போலீசார் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஏழுமலைக்கு சொந்தமான குடோன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த இன்னோவா கார் மற்றும் மினி டெம்போ ஆகியவற்றில் போலீசார் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது, கார் மற்றும் குடோனில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் இருந்த குட்கா புகையிலை பொருட்களை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இன்னோவா கார் மற்றும் மினி டெம்போ ஆகிய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கடைக்கு சீல் வைக்க நடவடிக்கை
இதுகுறித்து களமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மளிகை கடை உரிமையாளர் ஏழுமலையை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சட்டவிரோதமாக குட்கா பதுக்கிய ஏழுமலையின் மளிகை கடைக்கு சீல் வைப்பதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.
மளிகை கடை குடோன் மற்றும் காரில் மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN