கொடைக்கானல் சோதனைச் சாவடியில் லஞ்சம் - வாங்கி மதுபாட்டிலை லஞ்சம் பெற்று திருப்பிக் கொடுத்ததாக குற்றச்சாட்டு
திண்டுக்கல், 12 ஜூன் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செல்லும் பழனி மலை அடிவார சோதனைச் சாவடியில், சோதனை என்ற பெயரில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டிலை பணம் பெற்றுக்கொண்டு மீண்டும் சுற்றுலாப் பயணியிடம் ஒப்படைத்ததாக காவலர் மீது குற்றச்சாட்டு
கொடைக்கானல்


திண்டுக்கல், 12 ஜூன் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செல்லும் பழனி மலை அடிவார சோதனைச் சாவடியில், சோதனை என்ற பெயரில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டிலை பணம் பெற்றுக்கொண்டு மீண்டும் சுற்றுலாப் பயணியிடம் ஒப்படைத்ததாக காவலர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கொடைக்கானலுக்கு தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

கொடைக்கானலுக்கு செல்லும் வாகனங்கள் பழனி மற்றும் வத்தலக்குண்டு வழித்தடங்களில் உள்ள சோதனைச் சாவடிகளில் காவல்துறையினரால் பரிசோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

இந்நிலையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் சுற்றுலாவிற்காக கொடைக்கானலுக்கு வந்தபோது, அவர்கள் பயணித்த வாகனத்தில் இருந்த வெளிநாட்டு மதுபான பாட்டிலை பழனி அடிவார சோதனைச் சாவடியில் பணியில் இருந்த காவலர் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அவர்களை சில நேரம் காத்திருக்க வைத்த காவலர், அவர்களிடம் பேரம் பேசி ரூ.500 லஞ்சம் பெற்றுக்கொண்டு அந்த மதுபான பாட்டிலை மீண்டும் ஒப்படைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.மேலும், கொடைக்கானல் செல்லும் சோதனைச் சாவடிகளில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் சில காவலர்கள் அத்துமீறி நடந்து கொள்வதாக ஏற்கனவே பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்திருந்த நிலையில், இந்த வீடியோ புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வைரலாக பரவி வரும் வீடியோ குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி, உண்மை நிலையை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam