Enter your Email Address to subscribe to our newsletters

நாகை, 12 ஜூன் (ஹி.ச.)
காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு அணை திறக்கப்படாத நிலையில், நாகை மாவட்ட விவசாயிகள் அதிருப்தி தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
நாகை மாவட்டம் மீனம்பநல்லூர் கதவணை பகுதியில் திரண்ட விவசாயிகள், நீரின்றி காய்ந்து கிடக்கும் சந்திரநதி வாய்க்காலுக்கு பேரணியாக வந்தனர்.
பின்னர் அங்கு மலர்வளையம் வைத்து, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் வகையில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், காவிரி மேலாண்மை வாரியம் தமிழ்நாட்டிற்கு 19 டி.எம்.சி. அளவு காவிரி நீரை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்த போதிலும், அந்த உத்தரவை கர்நாடக அரசு முறையாக பின்பற்றவில்லை என்று குற்றம்சாட்டினர்.
காவிரி நீர் உரிமை தொடர்பான விவகாரத்தில் கர்நாடக அரசின் செயல்பாடுகளுக்கு அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், இந்த பிரச்சினையில் தமிழக அரசு கூடுதல் அழுத்தம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.
கர்நாடக அரசிடம் இருந்து தமிழ்நாட்டுக்கான உரிய நீரை பெற்றுத்தர மாநில அரசு தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
குறுவை சாகுபடி தொடங்க வேண்டிய காலத்தில் தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருவதாகவும், மேட்டூர் அணை திறப்பில் ஏற்பட்டுள்ள தாமதம் டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN