ராசிபுரம் துப்பாக்கி முனையில் கொள்ளை- தடயவியல் நிபுணர்கள் தீவிர விசாரணை
நாமக்கல், 12 ஜூன் (ஹி.ச.) நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பட்டணம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த கலைச்செல்வி என்ற பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டி, 19 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் பணத்தை முகமூடி அணிந்த
கொள்ளை


நாமக்கல், 12 ஜூன் (ஹி.ச.)

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பட்டணம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த கலைச்செல்வி என்ற பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டி, 19 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் பணத்தை முகமூடி அணிந்த கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற தடயவியல் நிபுணர்கள் கைரேகைகள் மற்றும் பிற தடயங்களை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். குற்றச்சம்பவம் நடைபெற்ற வீட்டிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால், குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் காவல்துறைக்கு சவால் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, ராசிபுரம் மற்றும் புதுப்பட்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் பணியை குற்றப்பிரிவு போலீசார் தொடங்கியுள்ளனர்.

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா உத்தரவின் பேரில், ராசிபுரம் துணைக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கொள்ளையர்கள் சம்பவத்திற்கு முன்பே அந்தப் பகுதியை நோட்டமிட்டார்களா, இருசக்கர வாகனம் அல்லது காரில் வந்து கண்காணித்தார்களா, அல்லது அப்பகுதியை நன்கு அறிந்தவர்களா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அருகிலுள்ள வீடுகளில் வசிப்பவர்களிடமும் சந்தேகத்திற்கிடமான நபர்கள் யாரேனும் சுற்றித் திரிந்தார்களா என்பது குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், பாதிக்கப்பட்ட கலைச்செல்வியிடம் கொள்ளையர்கள் வீட்டிற்குள் எவ்வாறு நுழைந்தனர், என்ன பேசினர், அவர்களின் உடலமைப்பு மற்றும் அடையாள அம்சங்கள் என்ன என்பது குறித்தும் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், துப்பாக்கியுடன் வந்த இரு கொள்ளையர்கள் பொன்மலை கிரிவலப் பாதை வழியாக தோட்டத்துக்குள் நுழைந்து பதுங்கியிருந்து, பின்னர் சரியான நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர்கள் தப்பிச் சென்றிருக்கக்கூடிய பாதைகளில் காணப்படும் கால்தடங்கள் மற்றும் வாகன தடயங்களும் ஆய்வு செய்யப்படுகின்றன.

சிசிடிவி ஆதாரங்கள் குறைவாக இருந்தாலும், சுற்றுப்புறப் பகுதிகளில் கிடைக்கும் கண்காணிப்பு காட்சிகள் மற்றும் சேகரிக்கப்பட்ட தடயங்களின் அடிப்படையில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய முடியும் என்ற நம்பிக்கையை காவல்துறை தெரிவித்துள்ளது. தற்போது வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam