Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 12 ஜூன் (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் களக்காடு தலையணை அருவியில் வெள்ளப்பெருக்கு நீடித்து வருவதால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கான தடை 9-வது நாளாகவும் தொடர்கிறது.
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால், களக்காடு தலையணை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
களக்காடு சூழல் சுற்றுலா மையமாக விளங்கும் தலையணை அருவிக்கு, அதன் குளிர்ச்சியான நீரும் மூலிகைத் தன்மையும் காரணமாக உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம். ஆனால், தற்போதைய வெள்ளப்பெருக்கு காரணமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
களக்காடு–முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் மற்றும் வன உயிரின காப்பாளர் உத்தரவின்படி, கடந்த ஜூன் 4-ஆம் தேதி முதல் தலையணை அருவியில் குளிப்பதற்கும், நீர்நிலைகளுக்குள் செல்லவும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை அமலில் உள்ளது.
வெள்ளத்தின் அளவு இன்னும் குறையாததால், இந்தத் தடை வெள்ளிக்கிழமையும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். வெள்ளநீர் குறைந்து பாதுகாப்பான சூழல் ஏற்பட்ட பின்னரே குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், தலையணை சுற்றுலா பகுதியை பார்வையிடுவதற்கு எந்தவிதத் தடையும் இல்லை என்றும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வனத்துறையின் அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam