Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 12 ஜூன் (ஹி.ச.)
கான்பூரிலிருந்து டெல்லி நோக்கி சென்ற சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று இரவு
ஆர்.எஸ்.எஸ். தேசிய தலைவர் மோகன் பகவத் ஏ-1 எக்ஸிக்யூட்டிவ் பெட்டியில் பயணித்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டம் வழியாக ரெயில் சென்று கொண்டிருந்த போது திடீரென மோகன் பகவத் பயணித்த ஏ-1 எக்ஸிக்யூட்டிவ் பெட்டியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கற்களை கொண்டு வீசினர்.
இதில் ரயிலின் வெளிப்புற ஜன்னல் கண்ணாடி விரிசல் அடைந்து சேதமடைந்தது.
அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் மோகன் பகவத் மற்றும் அவருடன் பயணித்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
மர்ம நபர்கள் கற்களை கொண்டு தாக்கிய கண்ணாடியின் எதிர்ப்புறம் சீட்டில் அமர்ந்திருந்ததால் எந்த பாதிப்பும் அவருக்கு ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும்,
ரெயில் துண்ட்லா சந்திப்பு அருகே நிறுத்தப்பட்டு ரெயில்வே பாதுகாப்புப் படை மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் ரெயில் டெல்லி நோக்கி புறப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து, ஆக்ரா மண்டல போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்வீச்சில் ஈடுபட்ட நபர்களை கண்டறிய சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்படுவதாகவும், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரெயில்களில் கல்வீச்சு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், இந்தச் சம்பவம் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து மீண்டும் ஆர் எஸ் எஸ் தொண்டர்களிடையே கேள்வி எழுப்பியுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA