Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 12 ஜூன் (ஹி.ச)
பிரதமர் தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் கலந்து கொண்டது மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான புதிய மற்றும் வலுவான திட்டங்களை முன்வைக்கத் தவறிவிட்டதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகள் திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலங்களில் ஏற்கனவே வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகளின் தொடர்ச்சியாகவே இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் கோரிக்கை மீண்டும் முன்வைக்கப்பட்டதையும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தமிழகத்தின் எதிர்கால போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு சென்னை–கன்னியாகுமரி, கோவை–சேலம்–ஓசூர் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் புதிய 8 மற்றும் 12 வழிச்சாலைகள் அமைப்பது போன்ற திட்டங்கள் வலியுறுத்தப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் மத்திய அரசின் நிதிப் பங்களிப்பு குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை தமிழக அரசு கடுமையாக எதிர்த்திருக்க வேண்டும் என்றும், மத்திய அரசுடன் மோதலைத் தவிர்க்கும் அணுகுமுறை மாநிலத்திற்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்றும் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மறுக்கும் நிலையில், அதற்கான மத்திய நிதியை மட்டும் கோருவது முரண்பாடான நிலைப்பாடு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோல், நீண்டகாலமாக நிறைவேறாமல் உள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தாமல், கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை கோருவது பயனற்றது என்றும் விமர்சித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் உருவாக்கப்பட்ட அரசியல் பிம்பங்களை விட, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நடைமுறைத் திட்டங்களே முக்கியம் என்றும், நல்ல ஆலோசகர்களின் வழிகாட்டுதலுடன் நிஜ நிலைகளை உணர்ந்து செயல்பட வேண்டிய நேரம் இது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நிதி ஆயோக் போன்ற முக்கிய தேசிய அளவிலான கூட்டத்தில் தமிழகத்திற்கு பயனளிக்கும் புதிய திட்டங்களை முன்வைப்பதற்குப் பதிலாக, முந்தைய அரசுகளின் கோரிக்கைகள் மற்றும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களையே மீண்டும் வலியுறுத்தியதால், இந்த டெல்லி பயணம் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை என டாக்டர் க. கிருஷ்ணசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ