Enter your Email Address to subscribe to our newsletters

வாஷிங்டன், 12 ஜூன் (ஹி.ச.)
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவியது.
அமெரிக்காவுடனான மோதலைத் தொடர்ந்து ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதையடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. மோதலைத் தணிக்க அமெரிக்கா, ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
அமைதி பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையிலும் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது. தற்காப்பு நடவடிக்கை எனக் கூறி ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக அமெரிக்க படைத்தளங்கள் உள்ள அரபு நாடுகள் மீது ஈரான் தாக்கியது.
இந்த மோதலின்போது, கடந்த 10-ம் தேதி ஹர்முஸ் ஜலசந்தி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானின் பந்தர் அப்பாஸ், சிரிக், மினப், குவாசம் தீவு, கொர்ஜன், கார்க் தீவு ஆகிய பகுதிகள் மீது நேற்று அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடியாக குவைத், பஹ்ரைன், ஜோர்டன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹர்முஸ் ஜலசந்தியை முற்றிலும் மூடுவதாகவும் ஈரான் அறிவித்தது.
மோதல் தீவிரமடைந்த நிலையில், ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், ஈரான் மீதான தாக்குதலை ரத்து செய்வதாக டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுவிட்டதால் தாக்குதல் ரத்து செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் அமெரிக்கா, இஸ்ரேல், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், துருக்கி, பாகிஸ்தான், பஹ்ரைன், குவைத், ஜோர்டன், எகிப்து உள்ளிட்ட நாடுகளின் முயற்சியால் இறுதி வடிவம் பெற்றுள்ளது.
ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என டிரம்ப் கூறியுள்ளார்.
அதேவேளை, ஈரானுடன் இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை அந்நாட்டின் துறைமுகங்கள் அமெரிக்க கடற்படையால் தொடர்ந்து முடக்கப்பட்டிருக்கும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b