Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 12 ஜூன் (ஹி.ச.)
கோவை வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த நவீன் மற்றும் அவரது நண்பர் நிர்மல் குமார் ஆகியோர் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த தொழிலில் கிடைத்த வருமானம் தொடர்பாக சிலருடன் பணப் பிரச்சினை மற்றும் விரோதம் ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நவீன் மற்றும் நிர்மல் குமார் ஆகியோரை ஒரு கும்பல் கடத்தி ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் அடைத்து வைத்து, அவர்களின் உறவினர்களிடம் ரூ.50 லட்சம் கொடுத்தால்தான் விடுவிப்போம் என்று மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கிடைத்த புகாரின் பேரில், போத்தனூர் காவல் ஆய்வாளர் அசோக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கடத்தல்காரர்கள் தொடர்பு கொண்ட செல்போன் எண்ணை பயன்படுத்தி, பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மூலம் பணம் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, திருப்பூர் பேருந்து நிலையம் அருகே பணத்தை பெற்றுக்கொள்ள வருமாறு கடத்தல் கும்பல் கூறியது. திட்டமிட்டபடி குடும்பத்தினருடன் சாதாரண உடையில் சென்ற போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது பணத்தை பெற வந்த இருவரை பிடித்து விசாரித்ததில், அவர்கள் திருப்பூர் நல்லூர் காவல் நிலையத்தில் தலைமை காவலர்களாக பணியாற்றும் ஆனந்தன் மற்றும் மோகன் என்பது தெரியவந்தது.
மேலும், திருப்பூரை சேர்ந்த ராம்குமார் மற்றும் காளிதாஸ் ஆகியோரின் உதவியுடன் கடத்தல் சம்பவம் அரங்கேறியதும் வெளிச்சத்துக்கு வந்தது.
தொடர்ந்து, திருப்பூரில் பதுங்கியிருந்த ராம்குமார் மற்றும் காளிதாஸையும் போலீசார் கைது செய்து, கடத்தப்பட்ட நவீன் மற்றும் நிர்மல் குமார் ஆகியோரை பாதுகாப்பாக மீட்டனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சம்பவத்தின் மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் கருப்பசாமியையும் போத்தனூர் போலீசார் கைது செய்தனர். கைது செய்யும் போது தப்பியோட முயன்ற கருப்பசாமிக்கு கால் முறிவு ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட தலைமை காவலர்கள் ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் காவல் ஆணையர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
காவல்துறையைச் சேர்ந்த இரு அதிகாரிகள் கடத்தல் வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டதுடன், பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது கோவை மற்றும் திருப்பூர் காவல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam