சென்னையை குளிர்வித்த கோடை மழை - சாலைகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல்
சென்னை, 12 ஜூன் (ஹி.ச.) சென்னை மாநகரம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று மதியம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கோடை வெப்பத்தின் தாக்கத்தால் தவித்து வந்த மக்களுக்கு இந்த மழை பெரும் நிம்மதியை அளித்துள்ளது. திருவேற்காடு, வானகரம், மதுரவா
சென்னையை குளிர்வித்த கோடை மழை - சாலைகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல்


சென்னை, 12 ஜூன் (ஹி.ச.)

சென்னை மாநகரம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று மதியம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கோடை வெப்பத்தின் தாக்கத்தால் தவித்து வந்த மக்களுக்கு இந்த மழை பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

திருவேற்காடு, வானகரம், மதுரவாயல், போரூர் மற்றும் ஆலப்பாக்கம் உள்ளிட்ட சென்னையின் மேற்கு புறநகர்ப் பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பதிவாகியுள்ளது.

திடீரென மேகங்கள் திரண்டு பெய்த இந்த மழையால், முக்கிய சாலைகளில் வாகன ஓட்டிகள் மெதுவாக சென்றனர். பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதேபோல, சென்னை மாநகருக்குட்பட்ட பகுதிகளிலும் மழை பரவலாக காணப்பட்டது.

நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை மற்றும் எழும்பூர் உள்ளிட்ட மத்திய சென்னை பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

இதமான காற்றுடன் பெய்த சாரல் மழையால் தட்பவெப்பநிலை குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது.

அதன்படி, தற்போது பெய்துவரும் மழையால் கடந்த சில நாட்களாக நிலவிய வெப்பத்தின் தாக்கம் தணிந்துள்ளது.

மாலை நேரத்திலும் மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / vidya.b