Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 12 ஜூன் (ஹி.ச.)
தென்காசி மாவட்டத்தில் கடந்த 10, 11 மற்றும் 12 ஜூன் ஆகிய மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தின் முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து, நீர்மட்டம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.
கடந்த 10-ம் தேதி மாவட்டத்தில் மொத்தம் 109.20 மில்லிமீட்டர் மழையும், 11-ம் தேதி 98.50 மில்லிமீட்டர் மழையும், 12-ம் தேதி 78.40 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மூன்று நாட்களையும் சேர்த்து மொத்தம் 286.10 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மழைப்பொழிவில் அதிகபட்சமாக 10-ம் தேதி குண்டாறு பகுதியில் 34 மில்லிமீட்டர், 11-ம் தேதி 39 மில்லிமீட்டர் மற்றும் 12-ம் தேதி 22 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் கடந்த மூன்று நாட்களில் செங்கோட்டை பகுதியில் 45 மில்லிமீட்டர், கடனாநதி அணைப் பகுதியில் 33 மில்லிமீட்டர், ராமநதி அணைப் பகுதியில் 33 மில்லிமீட்டர் மற்றும் அடவிநயினார் கோவில் அணைப் பகுதியில் 28 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இதன் எதிரொலியாக அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. 10-ம் தேதி கடனாநதி அணையின் நீர்மட்டம் 48.50 அடியாக இருந்த நிலையில் 12-ம் தேதி 56.10 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் மூன்று நாட்களில் 7.60 அடி உயர்வு ஏற்பட்டுள்ளது. அணையின் நீர்இருப்பு 63.35 மில்லியன் கனஅடியில் இருந்து 91.94 மில்லியன் கனஅடியாக உயர்ந்து 28.59 மில்லியன் கனஅடி கூடுதலாக சேமிக்கப்பட்டுள்ளது.
ராமநதி அணையின் நீர்மட்டம் 52.00 அடியிலிருந்து 60.50 அடியாக உயர்ந்து 8.50 அடி உயர்வு கண்டுள்ளது. நீர்இருப்பு 26.43 மில்லியன் கனஅடியில் இருந்து 43.50 மில்லியன் கனஅடியாக உயர்ந்து 17.07 மில்லியன் கனஅடி அதிகரித்துள்ளது.
கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 45.28 அடியிலிருந்து 47.90 அடியாக உயர்ந்து 2.62 அடி உயர்வு கண்டுள்ளது. நீர்இருப்பு 31.82 மில்லியன் கனஅடியில் இருந்து 38.49 மில்லியன் கனஅடியாக உயர்ந்து 6.67 மில்லியன் கனஅடி கூடுதலாக சேமிக்கப்பட்டுள்ளது.
குண்டாறு அணை 33.50 அடியிலிருந்து 36.10 அடியாக உயர்ந்து 2.60 அடி உயர்வுடன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. நீர்இருப்பு 14.84 மில்லியன் கனஅடியில் இருந்து 18.43 மில்லியன் கனஅடியாக உயர்ந்து 3.59 மில்லியன் கனஅடி அதிகரித்துள்ளது.
அடவிநயினார் கோவில் அணையின் நீர்மட்டம் 67.50 அடியிலிருந்து 72.50 அடியாக உயர்ந்து 5.00 அடி உயர்வு கண்டுள்ளது. நீர்இருப்பு 40.46 மில்லியன் கனஅடியில் இருந்து 47.42 மில்லியன் கனஅடியாக உயர்ந்து 6.96 மில்லியன் கனஅடி அதிகரித்துள்ளது.
நேற்று 98.50 மில்லிமீட்டர் மழை பதிவாகிய நிலையில் இன்று 78.40 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் மழைப்பொழிவு 20.10 மில்லிமீட்டர் குறைந்துள்ளது.
கடனாநதி அணையின் நீர்மட்டம் 52.80 அடியிலிருந்து 56.10 அடியாக உயர்ந்து 3.30 அடி உயர்ந்துள்ளது. ராமநதி அணை 56.00 அடியிலிருந்து 60.50 அடியாக உயர்ந்து 4.50 அடி உயர்வு கண்டுள்ளது.
கருப்பாநதி அணையில் 0.65 அடி உயர்வும், அடவிநயினார் கோவில் அணையில் 1.50 அடி உயர்வும் பதிவாகியுள்ளது. குண்டாறு அணை ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டிய நிலையில் 36.10 அடியாகவே நீடிக்கிறது.
இன்றைய நிலவரப்படி கடனாநதி அணைக்கு வினாடிக்கு 160 கனஅடி, ராமநதி அணைக்கு 120 கனஅடி, கருப்பாநதி அணைக்கு 25 கனஅடி, குண்டாறு அணைக்கு 16 கனஅடி மற்றும் அடவிநயினார் கோவில் அணைக்கு 24 கனஅடி வீதம் நீர்வரத்து இருந்து வருகிறது.
தொடர்ச்சியான மழையால் தென்காசி மாவட்டத்தின் அனைத்து முக்கிய அணைகளிலும் நீர்சேமிப்பு கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், குண்டாறு அணை முழு கொள்ளளவை எட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மற்ற அணைகளும் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே மகிழ்ச்சி நிலவுகிறது.
Hindusthan Samachar / ANANDHAN