Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 12 ஜூன் (ஹி.ச.)
திருப்பூர் மாநகராட்சியின் 3-வது மண்டலத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்த சுப்பிரமணியம் (52), சாலைப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரருக்கு நிலுவையில் இருந்த பில் தொகையை வழங்குவதற்காக ரூ.5 லட்சம் லஞ்சம் கோரியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஒப்பந்ததாரர் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதையடுத்து, லஞ்சத் தொகையை பெற்றுக் கொண்டிருந்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சுப்பிரமணியத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் மாநகராட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கைது செய்யப்பட்ட சுப்பிரமணியத்திடம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரது வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் உள்ள பீரோவில் இருந்து ரூ.7 லட்சத்து 75 ஆயிரம் ரொக்கம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணைக்காக எடுத்துச் சென்றனர்.
தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுப்பிரமணியம் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு எதிரான வழக்கில் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், சுப்பிரமணியத்தை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் மாநகராட்சி ஆணையர் அமித் உத்தரவிட்டுள்ளார்.
துறை ரீதியான மேலதிக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN