Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 12 ஜூன் (ஹி.ச.)
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக அறிவிக்கப்பட்டுள்ள சிறப்புத் தொகுப்புத் திட்டம் மட்டும் போதாது என்றும், விவசாயிகளின் அடிப்படை கோரிக்கைகளான 24 மணி நேர தடையற்ற மும்முனை மின்சாரம் மற்றும் முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடியை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்வதற்காக ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படுவதுடன், 18 மணி நேர தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு மற்றும் மின் அழுத்தக் குறைபாடுகள் தொடர்ந்து நிலவி வருவதால், விவசாயிகள் மோட்டார் பம்புகளை இயக்க முடியாமலும், நெற்பயிர்களுக்கு தேவையான அளவில் நீர் பாய்ச்ச முடியாமலும் பாதிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலை குறித்து விவசாயிகள் பலமுறை போராட்டங்களில் ஈடுபட்ட போதிலும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இதுபோன்ற சூழலில் 18 மணி நேர தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை விவசாயிகள் எவ்வாறு நம்புவார்கள் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
மேலும், ஆட்சிக்கு வந்தவுடன் குறு மற்றும் சிறு விவசாயிகளின் பயிர்க் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும், ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு காரணங்களைக் கூறி அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி கோரிக்கைக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருவதாகவும், தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போராட்டம் அறிவித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, தமிழக விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளான தடையற்ற 24 மணி நேர மும்முனை மின்சார விநியோகம் மற்றும் முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடியை எந்தவித காலதாமதமும் இன்றி உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ