நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக சாதனைகளுக்கு ‘ஸ்டிக்கர்’ ஒட்டியுள்ளார் முதல்வர்- எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி விமர்சனம்
சென்னை, 12 ஜூன் (ஹி.ச.) சென்னையில், நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் சாதனைகள் குறித்து முதலமைச்சர் பேசியதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தேர்த
உதயநிதி


சென்னை, 12 ஜூன் (ஹி.ச.)

சென்னையில், நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் சாதனைகள் குறித்து முதலமைச்சர் பேசியதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழ்நாடு கடனில் தத்தளிப்பதாகவும், மாநிலம் படுகுழியில் விழுந்தது போன்ற தோற்றத்தை உருவாக்கிய தற்போதைய முதலமைச்சர், டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, பெண்கள் வேலைவாய்ப்பு, கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த சாதனைகள் தற்போதைய அரசின் ஒரு மாத கால ஆட்சியில் நிகழ்ந்தவையா அல்லது முந்தைய திராவிட மாடல் ஆட்சியின் ஐந்தாண்டு கால சாதனைகளா என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தேர்தலுக்கு முன்பு நீட் குறித்து வேறுபட்ட கருத்தை தெரிவித்த முதலமைச்சர், தற்போது நீட் விலக்கு கோருவது முரண்பாடான நிலைப்பாடு எனவும் உதயநிதி விமர்சித்துள்ளார்.

அதேபோல், டெல்லி பயணத்தின் போது நிதி ஆயோக் கூட்டத்திலோ அல்லது கர்நாடக அரசிடமோ மேகதாது விவகாரம் குறித்து முதலமைச்சர் பேசவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

நிதி ஆயோக் கூட்டத்தில் முந்தைய திமுக அரசின் சாதனைகளுக்கு தற்போதைய அரசு “ஸ்டிக்கர்” ஒட்டியுள்ளதாக விமர்சித்த உதயநிதி, பொய்கள் மற்றும் அவதூறுகள் மூலம் பெறப்பட்ட வெற்றி நீண்ட காலம் நீடிக்காது என்றும், இறுதியில் உண்மை வெல்லும் என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam