Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 ஜூன் (ஹி.ச.)
முன்னாள் அமைச்சரும், தற்போதைய ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினருமான ஆர். வைத்திலிங்கம் மீதான ரூ.28.9 கோடி மதிப்பிலான சொத்துக்குவிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு தொடர்பான வழக்கை முடித்து வைப்பதாக முந்தைய தி.மு.க. அரசு பிறப்பித்த உத்தரவை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) இயக்குநர் அருண், ஐ.பி.எஸ்., ரத்து செய்துள்ளார்.
மேலும், இவ்வழக்கை உடனடியாக மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆர். வைத்திலிங்கம் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராகப் பதவி வகித்த போது, அவரது வருமானத்திற்கு அதிகமாக ரூ.28.9 கோடி மதிப்பிலான சொத்துகளை குவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுதொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை விசாரணை மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில், கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்ற காரணத்தைக் குறிப்பிட்டு, வழக்கை முடித்து வைக்க அரசு அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிராக பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகளும் விமர்சனங்களும் எழுந்தன.
தற்போது, டி.வி.ஏ.சி. இயக்குநர் அருண் அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்து ரத்து செய்ததுடன், வழக்கின் அனைத்து ஆவணங்கள், சொத்து விவரங்கள் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் குறித்து முழுமையான விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்த நடவடிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக உயர்மட்ட அரசியல் பிரமுகர்கள் மீதான வழக்குகளில் சட்டநடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுகின்றன என்ற விவாதமும் இதன் மூலம் மீண்டும் எழுந்துள்ளது.
வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ