Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 12 ஜூன் (ஹி.ச.)
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், நாள்தோறும் அதிகாலையில் படகுகள் மூலம் கடலுக்குள் சென்று மீன் பிடித்து மீண்டும் கரைக்கு வந்து விற்பனை செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதன்படி, இன்று அதிகாலை மரக்காணம் அருகே உள்ள அனிச்சங்குப்பம் கிராமத்தை சேர்ந்த மீனவர்களான சுதாகர்(45), கோவிந்தன்(40) ஆகியோர் பைபர் படகு மூலம் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
கடலுக்குள் சென்ற சிறிது தூரத்திலேயே திடீரென சீற்றத்துடன் வந்த கடல் அலையில் சிக்கி பைபர் படகு கடலில் கவிழ்ந்தது. இதில் பைபர் படகில் இருந்த மீனவர்களான சுதாகர், கோவிந்தன் உள்ளிட்ட இருவரும் கடலில் மூழ்கி உயிருக்கு போராடினர்.
அப்போது சிறிது தூரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்த சக மீனவர்கள் விரைந்து சென்று கடலில் மூழ்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த இரண்டு மீனவர்களையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் கோவிந்தனை சக மீனவர்கள் உயிருடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்த நிலையில் கடலில் மூழ்கி மாயமான மற்றொரு மீனவரான சுதாகரை சக மீனவர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர், நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு உயிரிழந்த நிலையில் மீனவர் சுதாகரின் உடல் சடலமாக மீட்கப்பட்டு கரைக்கு மீனவர்கள் கொண்டு வந்தனர். இது குறித்து தகவலறிந்ததும் கோட்டக்குப்பம் காவல் நிலைய போலீசாரும், மீன்வளத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து உயிரிழந்த மீனவர் சுதாகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கோட்டக்குப்பம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்களின் பைபர் படகு கடலில் கவிழந்து மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN