Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 ஜூன் (ஹி.ச)
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தமிழக வெற்றிக் கழக அரசை தொடர்ந்து விமர்சித்து வருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்து, த.வெ.க. மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. வி.எம்.எஸ். முஸ்தபா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், 2026 சட்டமன்றத் தேர்தலில் 50 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு மக்கள் முடிவுரை எழுதி, தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி பொறுப்பை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாத நிலையில் இருக்கும் அதிமுக, தேர்தலில் பல தொகுதிகளில் டெபாசிட்டை இழந்ததையும் நினைவுகூர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்ட ஆர்.பி. உதயகுமாரை மக்கள் நிராகரித்துவிட்ட நிலையில், இன்னும் பழைய அரசியல் நினைப்பில் அவர் செயல்பட்டு வருவதாகவும் முஸ்தபா விமர்சித்துள்ளார்.
தினந்தோறும் வீடியோ வெளியிட்டு அரசியல் பிழைப்பு நடத்துவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று ஒரு மாதமே ஆன நிலையில், ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் அவதூறு பரப்பப்படுவதாகவும், ஆனால் மக்கள் முதலமைச்சர் விஜய் மற்றும் அரசின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், நிர்வாக சீர்திருத்தங்கள், ஊழல் ஒழிப்பு மற்றும் வெளிப்படையான ஆட்சியை வழங்குவதில் அரசு உறுதியாக இருப்பதாகவும், தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை சுட்டிக்காட்டிய முஸ்தபா, அந்த கால ஆட்சியை மக்கள் மறக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலாவை பொதுச்செயலாளராகவும் முதலமைச்சராகவும் முன்னிறுத்த முயன்றதும், பின்னர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக மாறியதும் அரசியல் சந்தர்ப்பவாதத்தின் எடுத்துக்காட்டுகள் என அவர் விமர்சித்துள்ளார்.
ஆக்கப்பூர்வமான அரசியலில் ஈடுபடாமல் தொடர்ந்து அவதூறு பரப்பினால், ஆர்.பி. உதயகுமார் நிரந்தரமாக மக்களால் புறக்கணிக்கப்படுவார் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என வி.எம்.எஸ். முஸ்தபா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ