Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 12 ஜூன் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளர் பணிக்கான நேர்காணலில் கலந்துகொள்ள வந்த இளைஞர் ஒருவர், மத்திய புலனாய்வுத் துறை உள்பட 10-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் போலி அடையாள அட்டைகளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் திருநெல்வேலி மாவட்டம் கூந்தங்குளத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவராவார். சுகாதார ஆய்வாளர் பணியிடத்திற்கான நேர்காணலில் கலந்துகொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டது.
பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில், அவரிடம் இருந்து சிபிஐ உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு புலனாய்வு அமைப்புகள், பத்திரிகை நிறுவனங்கள் மற்றும் அரசுத் துறைகளின் பெயர்களில் தயாரிக்கப்பட்ட போலி அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டன.
முதற்கட்ட விசாரணையில், வேல்முருகன் பல்வேறு இடங்களில் தன்னை அரசு அதிகாரி போல காட்டிக்கொண்டு ஆதாயம் தேடியிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அடையாள அட்டைகள் அனைத்தும் மிக நேர்த்தியாக, அசல் போலவே தயாரிக்கப்பட்டுள்ளதால், இதன் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா என்றும், இவற்றை எங்கு, எப்படி தயாரித்தார் என்றும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
அரசு அலுவலகத்திற்குள் போலி அடையாள அட்டைகளுடன் ஊடுருவ முயன்ற சம்பவம் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேல்முருகன் மீது போலி ஆவணங்கள் தயாரித்தல், அரசு அதிகாரியாக நடித்து ஏமாற்ற முயன்றது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் விசாரணை தொடர்வதாக போலீசார் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b