Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 12 ஜூன் (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக, புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான திற்பரப்பு அருவியில் இன்று சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் அடைமழையால் கோதையாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அபாயகரமான அளவில் அதிகரித்து, நீரின் வேகமும் கடுமையாக உள்ளது.
பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை முன்னிட்டு, அருவிப் பகுதியில் குளிப்பதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அருவியை வேடிக்கை மட்டுமே பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி அருவியில் இறங்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை குறையும் வரையும், நீர்வரத்து சீராகும் வரையும் இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால் விடுமுறையை முன்னிட்டு திற்பரப்பு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். அருவிப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b