பள்ளிக்கல்வித்துறையில் சீர்திருத்தங்கள் - அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
சென்னை, 12 ஜூன் (ஹி.ச.) பள்ளிக்கல்வித்துறையில் நிலவும் காலிப்பணியிடங்கள் அனைத்தும் உரிய காலத்தில் நிரப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கல்வித்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு முக்கிய அறி
பள்ளிக்கல்வித்துறையில் சீர்திருத்தங்கள் - அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு


சென்னை, 12 ஜூன் (ஹி.ச.)

பள்ளிக்கல்வித்துறையில் நிலவும் காலிப்பணியிடங்கள் அனைத்தும் உரிய காலத்தில் நிரப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

கல்வித்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை இன்று சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் வெளியிட்டார்.

செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில்,

மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், வகுப்பறைகளில் மாணவர்கள் அதிகம் பேசவும், ஆசிரியர்கள் குறைவாகப் பேசி வழிகாட்டவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன் மூலம் மாணவர்களிடையே உரையாடல் திறனும், சிந்திக்கும் ஆற்றலும் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தேர்ச்சி விகிதத்தை உயர்த்த அனைத்து மட்டங்களிலும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்திய அமைச்சர், கற்பித்தல் முறைகளில் புதுமைகளைப் புகுத்தவும், பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தவும் ஆசிரியர்களை கேட்டுக்கொண்டார்.

சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்திய அமைச்சர், சாதி மற்றும் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையிலான ஆடைகள், அணிகலன்களுடன் மாணவர்கள் பள்ளிக்குள் வருவதைத் தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார். பள்ளிகள் அனைவருக்கும் பொதுவான கற்றல் சூழலாக இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம் என்றார்.

மேலும், தனியார் பள்ளிகள் தங்களது கட்டண விவரங்களை பெற்றோருக்கும் பொதுமக்களுக்கும் வெளிப்படையாகத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவிட்டார். கட்டண முறையில் ஒளிவுமறைவு இருக்கக்கூடாது எனவும், இதை கண்காணிக்க தனி குழு அமைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இந்த அறிவிப்புகள் மாநிலத்தில் பள்ளிக்கல்வியின் தரத்தை உயர்த்தும் முயற்சியின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்படவுள்ளன.

Hindusthan Samachar / vidya.b