கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அரசாணை வெளியீடு
சென்னை, 12 ஜூன் (ஹி.ச.) கள்ளர் சீரமைப்பு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கு 2026-27-ம் கல்வியாண்டில் பொது மாறுதல் வழங்கும் கல
கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து  அரசாணை வெளியீடு


சென்னை, 12 ஜூன் (ஹி.ச.)

கள்ளர் சீரமைப்பு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கு 2026-27-ம் கல்வியாண்டில் பொது மாறுதல் வழங்கும் கலந்தாய்வுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை நிர்ணயித்து அரசு ஆணையிட்டுள்ளது.

அரசாணையின்படி, ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் கலந்தாய்வு நடைபெறக்கூடிய நாளுக்கு முந்தைய கல்வியாண்டின் ஆகஸ்ட் 1-ம் தேதி நிலவரப்படி ‘எமிஸ்’ இணையதளத்தில் உள்ள மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர்-மாணவர் விகிதாசாரத்தின்படி ஆசிரியர் பணியிடம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

கள்ளர் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றிவருவோர் பணிமூப்பு மற்றும் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் கள்ளர் விடுதியின் காப்பாளர் அல்லது காப்பாளினியாக பணி அமர்த்தப்பட வேண்டும்.

பணிநிரவலில் ஆசிரியர் இல்லாமல் உபரியாக உள்ள காலிப்பணியிடங்களை பிசி, எம்பிசி நல ஆணையரின் தொகுப்புக்கு கொண்டுசெல்ல வேண்டும். அப்பணியிடங்களுக்கு மாறுதல் வழங்கக் கூடாது. உபரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பணிநிரவல் செய்த பின்னரே பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.

மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்களின் பெயர், கேட்கும் இடம் ஆகிய விவரங்கள் எமிஸ் இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும். மனமொத்த மாறுதலை பொருத்தவரை, பொது மாறுதல் கலந்தாய்வு நாளன்று மாறுதல் ஆணைகள் வழங்கப்பட வேண்டும்.

ஏற்கெனவே மனமொத்த மாறுதல் அடிப்படையில் மாறுதல் ஆணை பெற்றவர்களை 2 ஆண்டுகளுக்கு பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமும், சிறப்புத்தேர்வு மற்றும் நேரடி நியமனம் மூலமும் முறையாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வரும் அனைத்து ஆசிரியர்களும் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

கலந்தாய்வின்போது பாதிக்கப்பட்ட எந்த வொரு ஆசிரியரும் அந்த பணி முடிந்த 3 நாட்களுக்குள் உயர் அதிகாரிக்கு எழுத்துப்பூர்வமாக மேல்முறையீடு செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b