Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 ஜூன் (ஹி.ச)
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில், அதிமுக, திமுக, பாஜக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய ஏராளமானோர் தவெகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அரசியல் களம் முற்றிலும் மாறிவிட்டதாகக் கூறிய அவர், அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தமிழக வெற்றிக் கழகத்தை தனிமைப்படுத்த முயன்றன. இருந்தபோதிலும் தவெக வெற்றி பெற்றது எப்படி என்பதை இன்னும் அவர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றார்.
மேலும், எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி பெற்ற வெற்றி உண்மையான வெற்றி அல்ல. கொளத்தூரில் போட்டியிட்டு தோல்வியடைந்த மு.க.ஸ்டாலின் கூட அவரைவிட மேலானவர். எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்க வேண்டிய அவசியமே இல்லை என்று தெரிவித்தார்.
கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லையெனில் தவெக வெற்றி பெற்றிருக்காது என்ற விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், கூட்டணி கட்சிகள் இல்லாமல் இருந்திருந்தால் சேப்பாக்கம் தொகுதியே தோல்வியடைந்திருக்கும். மொத்தமாக 10 தொகுதிகள் கூட வென்றிருக்க முடியாது எனக் கூறினார்.
அதிமுக மற்றும் திமுக இடையே மறைமுக ஒத்துழைப்பு இருப்பதாக குற்றம்சாட்டிய ஆதவ் அர்ஜுனா, அதிமுக அரசுக்கு எதிராக முதலில் ஸ்டாலின் அறிக்கை வெளியிடுவார்; சிறிது நேரத்தில் அதையே எடப்பாடி பழனிசாமியும் வெளியிடுவார். எடப்பாடி பழனிசாமியின் அறிக்கைகள் அறிவாலயத்தில்தான் அச்சடிக்கப்படுகின்றன என்று விமர்சித்தார்.
இடைத்தேர்தல் குறித்து அதிமுக தலைவர்கள் கூறும் கருத்துகளையும் சாடிய அவர், ஒரு தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் கூட வெற்றி பெற்று காட்டுங்கள். அதன் பிறகு இடைத்தேர்தல் வெற்றியைப் பற்றி பேசுங்கள் என்றார்.
தான் 2015 முதல் 2021 வரை அதிமுகவுக்காக உழைத்ததாகக் குறிப்பிட்ட அவர், உழைத்துவிட்டுத்தான் இன்று இங்கு வந்திருக்கிறேன் என்றார்.
சினிமா துறையையும் குறிப்பிட்ட அவர், ஒருகாலத்தில் வாரம் தோறும் படங்களை வெளியிட்ட ரெட் ஜெயன்ட் நிறுவனம், கடந்த ஒரு மாதமாக ஒரு படத்தைக் கூட வெளியிடவில்லை. இனிமேல் மிரட்டல் அரசியல் செயல்படாது என்பதால் சினிமாத்துறை மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினார்.
மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருந்தால், எந்த சூழ்நிலையிலும் திமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என சவால் விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழக மக்களுக்கு வலுவான எதிர்க்கட்சி அவசியம். எங்களின் கொள்கைகளிலோ, திட்டங்களிலோ குறை இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்றார்.
நிகழ்ச்சியின் நிறைவில், இங்கு சால்வை, மாலை, ப்ரோட்டோகால் எதுவும் கிடையாது. இது ஒரு குடும்பம் போன்ற அமைப்பு என ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ