Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 ஜூன் (ஹி.ச.)
ஆவின் நிறுவனத்தின் பச்சைப் பால் (4.5% கொழுப்புச் சத்து) விற்பனை சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் பெருமளவில் குறைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் கவலையளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
தற்போது ஆவின் பச்சைப் பால் விற்பனை குறைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் லிட்டருக்கு ரூ.24 வரை கூடுதல் விலை கொடுத்து தனியார் நிறுவனங்களின் பாலை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தும் பாலின் விற்பனையை குறைப்பது நியாயமற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் தினசரி சுமார் 14 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படும் நிலையில், அதில் 7.5 லட்சம் லிட்டர் வரை பச்சைப் பால் விற்பனையாகி வந்ததாகவும், தற்போது அது 3.5 லட்சம் லிட்டராக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் பச்சைப் பால் விற்பனையை முற்றிலுமாக நிறுத்தும் முயற்சியில் ஆவின் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
பச்சைப் பாலின் உற்பத்திச் செலவு லிட்டருக்கு ரூ.51 ஆக இருந்தாலும், ரூ.44-க்கு விற்பனை செய்யப்படுவதால் லிட்டருக்கு ரூ.7 இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
ஆனால் இழப்பை காரணம் காட்டி மக்களால் அதிகம் விரும்பப்படும் பாலின் விற்பனையை குறைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், 2023-ஆம் ஆண்டு முதல் பச்சைப் பால் விற்பனையை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக 2024-ஆம் ஆண்டு ‘கிரீன் மேஜிக் பிளஸ்’ பால் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். பாமக எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அந்த முயற்சி கைவிடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆவின் நிறுவனம் லாப நோக்கத்திற்காக அல்லாமல், மக்களுக்கு தரமான பாலை குறைந்த விலையில் வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனம் என்பதால், பச்சைப் பால் விற்பனையை நிறுத்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட்டு, அதன் தடையற்ற வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P