Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 13 ஜூன் (ஹி.ச.)
சென்னையில் விற்பனையாகும் மொத்த 14.75 லட்சம் லிட்டர் ஆவின் பாலில், சுமார் 7.5 லட்சம் லிட்டர் அளவிற்கு விற்பனையாகும் கிரீன் மேஜிக் பால் விற்பனை படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் அதை முற்றிலும் நிறுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஆவின் விற்பனை மையங்களில் தெரிவிக்கப்படுவதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
கிரீன் மேஜிக் பால் விற்பனை குறைக்கப்படவில்லை என்று அரசு விளக்கம் அளித்துள்ள நிலையில், ஏன் முன்புபோல் அந்த பால் ஆவின் மையங்களில் கிடைப்பதில்லை என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
கிரீன் மேஜிக் பால் விற்பனை கணிசமாகக் குறைந்திருப்பதை பொதுமக்களே அறிந்திருப்பதாகவும், அரசின் விளக்கம் உண்மைக்கு புறம்பானது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், கடந்த 2023-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் 4.5 சதவீத கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பாக்கெட் பாலை நிறுத்தி, 3.5 சதவீத கொழுப்புச் சத்துள்ள ஊதா நிற பாலை அறிமுகப்படுத்த முயற்சிக்கப்பட்டதாகவும், அப்போது எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் அந்த முடிவு கைவிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தவெக அரசும் அதேபோன்ற நடவடிக்கையை மேற்கொள்வது கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.
கிரீன் மேஜிக் பால் விற்பனை குறைப்பதற்கு நிதி இழப்பு காரணம் எனக் கூறப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், நிதி இழப்பை ஈடுகட்ட பால் உற்பத்தி, கொள்முதல் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தும் பால் வகையின் விற்பனையை நிறுத்தக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
எனவே, கிரீன் மேஜிக் பாக்கெட் பாலை மீண்டும் போதுமான அளவில் விற்பனைக்கு கொண்டு வருவதுடன், பால் உற்பத்தி, கொள்முதல் மற்றும் விற்பனையை அதிகரிக்கும் நடவடிக்கைகளிலும் அரசு தீவிரம் காட்ட வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ