குடிநீர், மின்சார விநியோக தாமதம் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி - தமிழக அரசுக்கு ஹெச்.ராஜா கண்டனம்
சென்னை, 13 ஜூன் (ஹி.ச.) சென்னை புறநகர் ஊரப்பாக்கம் அருகே கீரைப்பாக்கம், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதிகள் மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவிற்குட்பட்ட கருவாழக்கரை கிராமத்தில் குடிநீர் விநியோகம் பல நாட்களாக பாதிக்கப்பட்டு
Hraja


Nn


சென்னை, 13 ஜூன் (ஹி.ச.)

சென்னை புறநகர் ஊரப்பாக்கம் அருகே கீரைப்பாக்கம், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதிகள் மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவிற்குட்பட்ட கருவாழக்கரை கிராமத்தில் குடிநீர் விநியோகம் பல நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சென்னை ஜி.எஸ்.டி. சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

குடிநீர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி மக்களை கடுமையாக பாதித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இதுவரை வழங்கப்பட்டு வந்த குடிநீர் புதிய ஆட்சியில் தடைபடுவதும், மறுக்கப்படுவதும் அதிர்ச்சியளிப்பதாகவும், கோடை காலம் முடிந்த பிறகும் குடிநீர் தட்டுப்பாடு தொடர்வதற்கான காரணங்களை அரசு ஆராய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் நீர்நிலைகள் முறையாக தூர்வாரப்படாததே குடிநீர் தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணம் எனக் குறிப்பிட்டுள்ள ஹெச்.ராஜா, அதற்காக உடனடியாக நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பல்வேறு வரிகளை செலுத்தும் மக்களுக்கு முறையான குடிநீர் விநியோகம் கிடைப்பது அவர்களின் அடிப்படை உரிமை என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல், சென்னை புறநகர் பகுதிகளில் அறிவிப்பின்றி பல மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டதாகவும், இதனால் அரசு ஏற்கனவே மக்களிடம் அவப்பெயரை சந்தித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

அத்தியாவசிய தேவைகளான குடிநீர் மற்றும் மின்சார விநியோகத்தில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும், ஆட்சிக்கு புதிதாக வந்துள்ளோம் என்ற காரணத்தை கூறி தாமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஹெச்.ராஜா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ