பாஜக பாணியில்தான் தமிழகத்தில் விஜய் ஆட்சி நடக்கிறது - மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
சென்னை, 13 ஜூன் (ஹி.ச) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில் திமுக மகளிர் அணி மற்றும் தொண்டரணி ஆலோசனைக் கூட்டம், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொத
M K Stalin


சென்னை, 13 ஜூன் (ஹி.ச)

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில் திமுக மகளிர் அணி மற்றும் தொண்டரணி ஆலோசனைக் கூட்டம், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.

இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தின் நிறைவில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழக அரசையும் முதலமைச்சர் விஜயையும் கடுமையாக விமர்சித்தார்.

தேர்தலில் திமுக பெற்ற வாக்குகளில் மகளிர் அணியின் பங்கு முக்கியமானதாக இருந்ததாக குறிப்பிட்ட அவர், எதிர்க்கட்சியாக இருக்கும் நாம் மீண்டும் ஆளும் கட்சியாக மாற இன்னும் வேகமாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்பட வேண்டும் என்றார்.

தற்போதைய அரசை ஆறு மாதங்கள் விமர்சிக்காமல் இருப்போமா என்று தான் முன்பு கூறியதாகவும், அதனை ஆட்சியை கவிழ்க்கும் சதி என சிலர் திரித்து பேசுவதாகவும் கூறினார். தோல்விக்கான காரணங்களை திமுக ஆராய்ந்து வருவதாகவும், அதே நேரத்தில் பொறுப்பான எதிர்க்கட்சியாக அரசின் குறைபாடுகளை சுட்டிக்காட்டும் என்றும் தெரிவித்தார்.

திமுக ஆட்சிக்காலத்தில் மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண், விடியல் பயணம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக கூறிய ஸ்டாலின், தற்போது சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் குற்றச்சம்பவங்கள், மின்வெட்டு, சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் விவசாயிகள் தொடர்பான குற்றச்சாட்டுகளே அதிகம் பேசப்படுவதாக தெரிவித்தார்.

தவெக ஆட்சியில் பாதுகாப்பு இருக்கும் என்று கூறி ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் இன்று தவெக ஆட்சியிலிருந்தே மக்களுக்கு பாதுகாப்பு தேவைப்படும் நிலை உருவாகியுள்ளது என அவர் குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், சில சம்பவங்களில் தவெக நிர்வாகிகளின் பெயர்கள் அடிபடுவதாக செய்திகள் வெளியாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முதலமைச்சர் விஜய் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தங்களது கட்சிக்கு இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறிய ஸ்டாலின், தனது ஆட்சியின் மீது முதலமைச்சருக்கே நம்பிக்கை இல்லையா? ஆதரவு கட்சிகள் மீதும் நம்பிக்கை இல்லையா? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், டெல்லியில் பாஜக செய்து வருவதைப் போலவே தமிழகத்தில் தவெக அரசு செயல்பட்டு வருகிறது. மக்கள் வாக்களித்து வெற்றி பெற்ற உறுப்பினர்கள், மை காயும் முன்பே கட்சி மாறுவது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல என்றார்.

முதலமைச்சர் விஜய் அடிக்கடி Confident ஆக இருங்கள் என்று பேசுவதாக குறிப்பிட்ட அவர், ஆனால் அவரே Confident ஆக இல்லை என்பது அவரது செயல்பாடுகளில் தெரிகிறது என்று விமர்சித்தார்.

டெல்லி பயணம் தொடர்பாகவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். நான் டெல்லி சென்றபோது அமலாக்கத்துறையைத் தவிர்க்கச் சென்றதாகவும், பாஜகவுடன் மறைமுக கூட்டணி வைத்திருப்பதாகவும் விஜய் குற்றம்சாட்டினார். தற்போது அவர் டெல்லி சென்றதற்கு என்ன காரணம்? கரூர் வழக்கிலிருந்து தப்பிக்கச் சென்றாரா என்று நாங்களும் கேட்கலாம். ஆனால் நாங்கள் அந்த அளவுக்கு தரம் தாழ்ந்து அரசியல் செய்ய மாட்டோம் என்றார்.

மும்மொழிக் கொள்கையை எதிர்த்ததால் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி வழங்கப்படவில்லை என்றும், மாநில உரிமைகள் தொடர்பாக திமுக மேற்கொண்ட நடவடிக்கைகளை அப்போது விமர்சித்தவர்கள் தற்போது அதே பாதையில் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது சினிமா அல்ல; ஆட்சி நிர்வாகம். இன்று நடைபெறும் ஆட்சி, திமுக அரசு அமைத்துக் கொடுத்த நிர்வாகக் கட்டமைப்பின் அடிப்படையில்தான் இயங்குகிறது. மாநில உரிமை, சமூகநீதி, வளர்ச்சி என எதுவாக இருந்தாலும் திராவிட மாடல் வழியில்தான் செயல்படுத்த முடியும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும், 2036-ஆம் ஆண்டுக்குள் ஒன்றரை டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை முதலமைச்சர் விஜய் அறிவித்திருப்பதை சுட்டிக்காட்டிய அவர், அதற்காக எனது வாழ்த்துக்கள் மாண்புமிகு முதலமைச்சரே என்று கிண்டலாக குறிப்பிட்டார்.

இறுதியாக, திமுகவை நம்பி ஒரு கோடியே 65 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவது நமது கடமை. கொள்கை, வரலாறு, மக்கள் நலப் பணிகள் ஆகியவற்றின் அடிப்படையில் மீண்டும் மக்கள் திமுகவை நோக்கி வருவார்கள் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ