Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 13 ஜூன் (ஹி.ச.)
பாஜக மாநில நிர்வாகியாக உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி, விரைவில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த விஜயதரணி, தமிழக அரசியலில் நீண்ட காலமாக செயல்பட்டு வரும் பெண் அரசியல்வாதிகளில் ஒருவர். காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்புகளை வகித்த அவர், 2011, 2016 மற்றும் 2021 ஆகிய மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் விளவங்கோடு தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழக காங்கிரஸின் முக்கிய பெண் முகமாக கருதப்பட்ட விஜயதரணி, கட்சியின் தேசிய மற்றும் மாநில அளவிலான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸின் வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ள முக்கிய பங்கு வகித்த தலைவராகவும் அறியப்பட்டார்.
ஆனால், காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் அரசியல் சூழ்நிலைகளின் காரணமாக கடந்த 2024-ஆம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அப்போது அவரது இணைவு தமிழக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
எனினும், பாஜகவில் இணைந்த பிறகு அவர் எதிர்பார்த்த அளவிலான முக்கியத்துவம் அல்லது அமைப்புப் பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தி நிலவியதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. இதன் தொடர்ச்சியாக, புதிய அரசியல் வாய்ப்புகளை ஆராய்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சமீப காலமாக தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சியை கவனித்து வந்த விஜயதரணி, அக்கட்சியில் இணைவது குறித்து முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் அடிப்படையில், விரைவில் அவர் தவெகவில் இணையக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
விஜயதரணி தவெகவில் இணைந்தால், குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தென் தமிழகத்தில் கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தும் முயற்சிக்கு அது உதவியாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
பெண்கள் மத்தியில் தனக்கென ஒரு ஆதரவு வட்டத்தை உருவாக்கியுள்ள விஜயதரணியின் வருகை, தவெகவுக்கு கூடுதல் பலமாக அமையக்கூடும் என்றும் மதிப்பிடப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam