Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 ஜூன் (ஹி.ச.)
சென்னை வேளச்சேரி லட்சுமிபுரம் பகுதியில் வீடுகளை லீசுக்கு விடுவதாகக் கூறி, இணையதள விளம்பரங்கள் மூலம் பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
சென்னையில் வாடகை மற்றும் லீஸ் வீடுகளுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், குறைந்த வாடகை மற்றும் நீண்டகால வசதி என்ற பெயரில் பொதுமக்களை குறிவைத்து மோசடிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், வேளச்சேரி லட்சுமிபுரம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் வீட்டை லீசுக்கு வழங்குவதாக OLX தளத்தில் விளம்பரம் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த விளம்பரத்தை நம்பி தொடர்புகொண்ட பலரிடம், அக்பர் ஷரீப் உள்ளிட்ட சிலர் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை பணமாகவும், ஆன்லைன் பரிமாற்றம் மூலமாகவும் தொகைகளை பெற்றதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆனால், பணம் பெற்ற பின்னர் வீடு ஒப்படைக்கப்படவில்லை என்றும், செலுத்திய தொகைகளும் திருப்பி வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த மோசடி மூலம் ரூ.3 கோடிக்கும் மேல் பணம் ஏமாற்றப்பட்டுள்ளதாக கூறிய பாதிக்கப்பட்டவர்கள், ஒரே வீட்டை பலருக்கும் லீசுக்கு விடுவதாகக் கூறி பணம் வசூலித்ததாக குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து ஏற்கனவே வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகவும், அந்த வழக்கில் தொடர்புடைய இருவரை மட்டும் காவல்துறையினர் கைது செய்ததாகவும் தெரிவித்தனர்.
ஆனால், மோசடிக்கு முக்கிய காரணமாகக் கூறப்படும் அக்பர் ஷரீப் மீது இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
மேலும், சிலருக்கு தற்காலிகமாக வேறு வீடுகளை வாடகைக்கு எடுத்து கொடுத்து, அதன் வாடகையையும் குறிப்பிட்ட காலம் வரை செலுத்தி நம்பிக்கை ஏற்படுத்திய பின்னர், மீதமுள்ள பணத்தை திருப்பி வழங்காமல் ஏமாற்றியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 85-க்கும் மேற்பட்ட புகார்கள் காவல்துறையில் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆன்லைன் மூலம் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த மோசடி குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சருமான ரா. குமார் அவர்களிடமும் முறையிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தங்களிடம் மோசடியாகப் பெறப்பட்ட பணத்தை மீட்டுத் தருவதோடு, சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
Hindusthan Samachar / P YUVARAJ