Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 ஜூன் (ஹி.ச.)
சென்னை எழும்பூரில் இருந்து செங்கல்பட்டு நோக்கி 16 பெட்டிகளுடன் சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் எஞ்சின் இன்று காலை திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் தாம்பரம் அருகே நிகழ்ந்ததால், அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தபோது, தண்டவாளத்தில் இருந்த ஜல்லிக்கற்கள் விலகியிருப்பதைக் கண்ட எஞ்சின் ஓட்டுநர் உடனடியாக விழிப்புடன் செயல்பட்டார்.
ஆபத்தை உணர்ந்த அவர், ரயிலை அவசரகால பிரேக் மூலம் நிறுத்தினார். மேலும், பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, ஜல்லிக்கற்களை ஏற்றிச் சென்ற பெட்டிகளை எஞ்சினில் இருந்து விரைவாக துண்டித்தார்.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட தண்டவாளப் பகுதியில் இருந்த பழைய ஜல்லிக்கற்களை அப்புறப்படுத்திவிட்டு, புதிய ஜல்லிக்கற்களை நிரப்பும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன.
அப்போது எதிர்பாராத விதமாக எஞ்சின் மட்டும் தடம் புரண்டது. அதிர்ஷ்டவசமாக, ஓட்டுநரின் சாதுர்யமான செயலால் பெட்டிகள் கவிழாமல் தடுக்கப்பட்டதால், உயிர்ச்சேதம் மற்றும் பெரும் பொருட்சேதம் தவிர்க்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் ரயில்வே உயரதிகாரிகள் மற்றும் பராமரிப்பு ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தடம் புரண்ட எஞ்சினை மீட்கும் பணியும், தண்டவாள சீரமைப்பு பணியும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த விபத்து குறித்து ரயில்வே நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் சில புறநகர் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு ரயில்வே நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது.
மீட்பு பணிகள் முடிந்ததும் வழக்கமான ரயில் சேவை தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b