Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 13 ஜூன் (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் 230/110 கிலோவாட் துணை மின் நிலையத்தில் தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்விற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தற்போது ஏற்படும் மின் தடைகளுக்கான காரணங்கள் குறித்து விளக்கமளித்தார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
சென்னையில் மட்டும் 38 லட்சம் மின் நுகர்வோர்கள் உள்ளனர். சில பகுதிகளில் தேவைக்கு அதிகமான மின் பளு ஏற்படுவதே மின் தடைக்கு முக்கிய காரணமாக உள்ளது.
கோடை காலத்தில் மின்சார பயன்பாடு வழக்கத்தை விட அதிகரித்துள்ளதால், குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள மின்மாற்றிகள் மற்றும் மின் பாதைகளில் அதிக சுமை ஏற்படுகிறது.
மேலும், பழுதடைந்த மின் சாதனங்களும் மின் தடைக்கு மற்றொரு காரணமாக அமைகின்றது. பழைய மின்கம்பிகள், மின்மாற்றிகள் ஆகியவற்றை படிப்படியாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.
அதேநேரம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 11-க்கும் மேற்பட்ட தனியார் முகமைகள் சாலை வெட்டும் பணிகளில் ஈடுபட்டு வருவதால், மின் கேபிள்கள் சேதமடைந்து எதிர்பாராத மின்வெட்டு ஏற்படுகின்றது.
இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் புதிய துணை மின் நிலையங்களை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பஞ்செட்டி துணை மின் நிலையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முடிவடையும் போது, மின் பளு குறைந்து தடையில்லா மின்சாரம் வழங்க முடியும் .
மின் வாரியம் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகின்றது. பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b