நிபா வைரஸ் தீவிர கண்காணிப்பு - நீலகிரி சோதனைச் சாவடிகளில் வாகனங்கள் சோதனைக்குப் பின்னரே அனுமதி
நீலகிரி, 13 ஜூன் (ஹி.ச.) கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்று மீண்டும் உறுதியாகியுள்ளதைத் தொடர்ந்து, தமிழக-கேரள எல்லையோர மாவட்டமான நீலகிரியில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் தீவிர பரிசோதனை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கோழிக்கோடு மாவ
நிபா வைரஸ் தீவிர கண்காணிப்பு - நீலகிரி சோதனைச் சாவடிகளில் வாகனங்கள் சோதனைக்குப் பின்னரே அனுமதி


நீலகிரி, 13 ஜூன் (ஹி.ச.)

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்று மீண்டும் உறுதியாகியுள்ளதைத் தொடர்ந்து, தமிழக-கேரள எல்லையோர மாவட்டமான நீலகிரியில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் தீவிர பரிசோதனை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

கோழிக்கோடு மாவட்டத்தில் 4 வயது சிறுமி ஒருவர் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தமிழக சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

இதன்படி, நீலகிரி மாவட்டத்தின் கக்கநல்லா, நாடுகாணி, தாளூர் உள்ளிட்ட முக்கிய சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் மருத்துவக் குழுக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன.

கேரளாவில் இருந்து தமிழகம் வரும் கார்கள், வேன்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, பயணிகளுக்கு காய்ச்சல், தலைவலி, சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகள் உள்ளதா என தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கப்படுகின்றன.

பரிசோதனைக்குப் பிறகே வாகனங்கள் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.

கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இணைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அறிகுறிகள் கண்டறியப்படும் நபர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு, அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை என்றும், காய்ச்சல், தலைச்சுற்றல், வாந்தி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையை அணுக வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், வவ்வால்கள் கடித்த பழங்களை உண்பதைத் தவிர்க்குமாறும், தனிநபர் சுகாதாரத்தை கடைப்பிடிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. எல்லையோர கிராமங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

Hindusthan Samachar / vidya.b