Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 13 ஜூன் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் 50 அடி பள்ளத்தில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி உட்பட மூவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
சங்கராபுரம் பொய்குணம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே வசித்து வந்த பாஸ்கரன் - அலமேலு தம்பதியரில், அலமேலு கடந்த மாதம் 23-ஆம் தேதி திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவரது கணவர் பாஸ்கரன், மறுநாள் சங்கராபுரம் காவல் நிலையத்தில் தனது மனைவியை காணவில்லை என புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ராஜப்பன் என்பவர் தாமாக முன்வந்து சங்கராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
பின்னர் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் அலமேலுவை கொலை செய்ததாகவும், கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள வஞ்சிக்குழி பகுதியில் 50 அடி பள்ளத்தில் உடலை வீசியதாகவும் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ராஜப்பனை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், பள்ளத்தில் இருந்து சாக்கு மூட்டையில் இருந்த அலமேலுவின் உடலை மீட்டனர்.
பின்னர் அங்கேயே உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக மேலும் இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam