தென்மேற்கு பருவமழை தீவிரம் - தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!!
கன்னியாகுமரி, 13 ஜூன் (ஹி.ச.) கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதையடுத்து கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய
தாமிரபரணி ஆறு


கன்னியாகுமரி, 13 ஜூன் (ஹி.ச.)

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதையடுத்து கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக பேச்சிப்பாறை, கோதையாறு, சிற்றாறு, ஆறுகாணி, பத்துக்காணி, ஒருநூறாம் வயல் உள்ளிட்ட மலையோரப் பகுதிகளில் தொடர்ந்து மிதமான மற்றும் கனமழை பெய்து வருவதால் முக்கிய நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகளிலும், திற்பரப்பு அருவி மற்றும் குழித்துறை தாமிரபரணி ஆற்றிலும் தண்ணீர் வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக களியக்காவிளை, படந்தாலுமூடு, குழித்துறை, குலசேகரம், சுருளகோடு, திருவட்டாறு, பேச்சிப்பாறை மற்றும் கோதையாறு உள்ளிட்ட கேரள எல்லைப்பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை விடிய விடிய பெய்து வருகிறது.

இதன் விளைவாக திற்பரப்பு வலது கரை கால்வாய் மற்றும் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளநீர் வேகமாக கரைபுரண்டு ஓடுகிறது.

இதனால் ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், தேவையற்ற முறையில் ஆற்றுப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமெனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

நீர்நிலைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam