Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 13 ஜூன் (ஹி.ச.)
கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பான வழக்கில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ASP) பிரேம் ஆனந்த் இன்று சிபிஐ அதிகாரிகள் முன்பு விசாரணைக்காக ஆஜராகினார்.
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரித்து வருகிறது.
இதற்காக கரூரில் உள்ள சுற்றுலா மாளிகையில் தற்காலிக சிபிஐ அலுவலகம் அமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடைபெற்று வருகிறது.
வேலுச்சாமிபுரம் பகுதி பொதுமக்கள், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உடற்கூறு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காவல்துறையினர் மற்றும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரிடம் சிபிஐ அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளனர்.
சட்டமன்றத் தேர்தல் காலத்தில் விசாரணை நடவடிக்கைகள் மந்தமாக இருந்த நிலையில், அண்மையில் மீண்டும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக சம்பவத்தின்போது பாதுகாப்பு பணியில் இருந்த 5 காவல் ஆய்வாளர்கள், 5 உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், சம்பவம் நடந்த நாளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வை செய்த அதிகாரிகளில் ஒருவரான மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரேம் ஆனந்த் இன்று சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவர் வந்த காவல்துறை வாகனத்தில் இருந்த முக்கிய ஆவணங்களையும் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.
கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள், அனுமதிகள், கூட்டக் கட்டுப்பாடு நடவடிக்கைகள் மற்றும் சம்பவ நாளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து அவரிடம் விரிவாக விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கின் விசாரணை மீண்டும் வேகமடைந்திருப்பதால், அடுத்த கட்டமாக மேலும் பல அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய நபர்கள் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P