Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 13 ஜூன் (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்களுக்கு அரசின் மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெயை கேரளாவுக்கு கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட நிர்வாகத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மாவட்ட பறக்கும் படை வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் தேங்காய்ப்பட்டினம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சென்ற இரண்டு சொகுசு கார்களை நிறுத்தி சோதனை செய்தபோது, அவற்றில் பெருமளவில் மண்ணெண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட மண்ணெண்ணெய் மீனவர்களுக்கு அரசால் மானிய விலையில் வழங்கப்படும் எரிபொருள் என்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இந்த மண்ணெண்ணெயை கேரள மாநிலத்திற்கு கடத்த முயற்சி செய்யப்பட்டதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து, சுமார் 1,800 லிட்டர் மண்ணெண்ணெயும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் மீனவர்களுக்காக வழங்கப்படும் மானிய மண்ணெண்ணெய், சட்டவிரோதமாக வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவது தொடர்பாக அவ்வப்போது புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், அதிகாரிகளின் இந்த நடவடிக்கை கவனம் பெற்றுள்ளது.
அதேநேரத்தில், மண்ணெண்ணெய் கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்கள் தொடர்ந்து நடைபெறுவதற்கு சில அதிகாரிகளின் அலட்சியம் அல்லது உடந்தை காரணமாக இருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஒரு புறம் கடத்தல் சம்பவங்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், மறுபுறம் அதே நிர்வாக அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகளே இதுபோன்ற கடத்தல் முயற்சிகளை தடுத்து பறிமுதல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு
வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN