Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 13 ஜூன் (ஹி.ச)
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு முன்வைத்து வரும் மேகதாது அணைத் திட்டத்தை கைவிட வலியுறுத்தும் வகையில், தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் கூட்ட தமிழ்நாடு முதலமைச்சர் முயற்சிக்க வேண்டும் என தமிழர் வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழ்நாடு அரசில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் அமைச்சர்கள், அகில இந்திய காங்கிரஸ் தலைமை மற்றும் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்தபடி தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கப்படுவதை உறுதி செய்யவும், மேகதாது அணைத் திட்டத்தை கைவிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
காவிரி ஆறு தமிழகத்தின் 14 மாவட்டங்களின் பாசன ஆதாரமாகவும், சென்னை உள்ளிட்ட 30 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், மேகதாது அணை கட்டப்பட்டால் வேளாண்மையும், கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் தேவையும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவிதமான கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று காவிரி நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
மேகதாது அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் விவாதிக்க தடையில்லை என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்திருந்தாலும், தமிழ்நாடு தனது எதிர்ப்பை பதிவு செய்யலாம் என்றும் அந்த எதிர்ப்பை கருத்தில் கொண்டே முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்து மேகதாது அணைத் திட்டத்திற்கு விரைவான அனுமதி வழங்க கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறியுள்ள அவர், இதேபோல் தமிழ்நாடு முதலமைச்சரும் மத்திய அரசிடம் வலுவான முறையில் தமிழகத்தின் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றார்.
மேலும், காவிரி விவகாரம் இரு மாநில மக்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய பிரச்சினை என்பதால், கர்நாடக காங்கிரஸ் அரசு ஒருதலைப்பட்சமாக செயல்படக் கூடாது என அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவுறுத்த வேண்டும் என்றும், இதற்காக சோனியா காந்தி, ராகுல் காந்தி முன்னிலையில் இரு மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்த தமிழக அரசு முன்முயற்சி எடுக்க வேண்டும் என்றும் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ